எந்திரன்... மந்திரன்... தந்திரன்

பல திறமைசாலிகள் ஒன்றிணைந்து விரைவில் நாம் வெள்ளித்திரையில் காணக் கிடைக்கப்போகும் ஒரு பெரிய விருந்து எந்திரன். இது தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று. மிகப் பெரிய வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொலவை காட்டும் கல், சராசரி படமாக இருந்தால் சினிமா என்ற நெடுந்தொலைவு பயணித்தில் சற்றே அமர்ந்து செல்ல ஒரு ஒய்வுக் கல்.

எந்திரன்... ரஜினி, அவர்தானே கதாநாயகன். ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ அதை தருவதில் ரஜினி என்றும் ஏமாற்றியது இல்லை. ஆக்‌ஷன், ஸ்டைல், சிரிப்பு, டயலாக் டெலிவரி... அது குசேலனோ, சிவாஜியோ இல்லை எந்திரனோ அவர் பகுதியை சிறப்பாக செய்திருப்பார்.

மந்திரன்... சங்கர், அவர்தானே இயக்குனர். தன் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முந்தைய படத்தினை விட அடுத்த ஒரு படி மேலே செல்ல என்ன செய்ய வேண்டும் என யோசிப்பவர். சிவாஜி இயக்குனர் சங்கரை வெல்வது எப்படி என சிந்தித்து நிச்சயமா எந்திரனில் பல புதிய மந்திரங்களை உச்சரித்து இருப்பார்.

தந்திரன்... கலாநிதிமாறன், அவர்தானே தயாரிப்பாளர். வியாபார தந்திரம் அறிந்த எந்திரன் & மந்திரன். காசை போட்டு காசை எடுக்கும் இயந்திரம் எந்திரன் என்பதை அறிந்து இயக்குனர் கேட்ட கோடிகளை கொட்டிக் கொடுத்த (கேடி) மந்திரன். இசைத் தகடு வெளியீட்டை வெளிநாட்டில் (மலேசியாவில்) வெளியிட்டு முதல் வருமானத்தை வெள்ளிகளில் (டாலர்களில்) வெள்ளாமை செய்ய ஆரம்பித்து விட்டார். இனி எந்திரன் எழுத்தது, ஆயிபோனது, பல்துலக்கியது என்று இரவு எந்திரன் தூங்கப்போனது வரை அனைத்தையும் சன் நெட்வொர்க்கில் நீங்கள் பார்த்து ர(இம்)சிக்கலாம். அதுதானே அவரது வியாபார தந்திரம்.

எந்திரனோ, மந்திரனோ இல்லை தந்திரனோ, ஒரு இந்திரனாக தமிழ் சினிமா ரசிகர்களை இரட்சித்து மகிழ்விக்க வேண்டும்.

கலியுகமா இல்லை பலியுகமா?

ஆட்டுரலில் குழவி நின்று கல் சுற்றியது
கலி காலமாம்

தொடர்வண்டி நீராவியில்லாமல் ஓடுகிறது
மின்சாரத்தின் உதவியாம்

தொடர்பில்லாமல் தொலைக்காட்சியும் தொலைபேசியும்
தகவல்தொடர்பின் புதுப் பரிணாமமாம்

கடல் நீரைக் குடி நீராக்கி குடிக்கப்போகிறோம்
சுழற்ச்சி மாற்றமாம்

ஆமாம், இவையெல்லாம்
கலியுகத்தின் மாற்றம் பலியுகத்தின் தோற்றம்.

மறந்து விட்டோம் பண்பாட்டை
இழந்து விட்டோம் செயல்பாட்டை

அறிவியல் ஆடுகிறது வேட்டை
ஓசோனில் போடுகிறது ஓட்டை

தெரிகிறதா அதுகாட்டும் நடைபாட்டை?
அடையப்போகிறோம் விரைவில் சுடுகாட்டை.

வண்ணாந்துறை

ஒவ்வொரு நாட்டிலும் சைனா டவுன் இருப்பது போல் வண்ணாந்துறையும் இருக்கும் போல, சென்னையில் அது வண்ணாரப் பேட்டை, சிங்கப்பூரில் அது தோபி காட் (பிரிட்டிஷ் காலணிகளில் என்று நினைக்கிறேன்).

அன்று வண்ணாந்துறையில் அழுக்கு வெளுக்கப் பட்டு பலரும் பொலிவுடன் வளம்வர காரணமாயிருந்து உள்ளது. இன்று அந்த வண்ணாந்துறைய மையமாக வைத்து ஒரு சிறந்த தமிழ்ப் படம் வந்துள்ளது. இது தமிழ் சினிமாவில் உள்ள இன்றைய இயக்குனர்களின் மனதை வெளுக்குமா?

ஒரு படத்தின் கதாநாயகன் அதன் இயக்குனர் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது, ஹீரோ-தான் மாஸு என சொல்பவர்கள் என் பார்வையில் வெரும் லூஸு. வெரும் வெளிர் வெள்ளை வேட்டியில் ஒரு கதா நாயகனை இன்று நம் கண்ணில் காட்டியுள்ளது இப்படம்.

வடநாட்டு கோழியைப் போட்டு வறுத்தால் மசாலாவாக இருக்கும் என்று எண்ணி கதையை நம்பாமல் வெள்ளைச் சதையை நம்பி படம் பண்ணும் இயக்குனர்களின் நம்பிக்கையை வெளுக்க இதோ ஒரு தமிழ்ப் படம். அறைகுறை ஆடையில் (ஏமி ஜாக்ஸன்) – அள்ளித்தர இருந்தாலும் அவரை அழகியாக (ஏமி மில்கின்ஸனாக) காட்டியவர் இப்பட இயக்குனர்.

டெக்னாலஜி ஹாஸ் ஸோ இம்ப்ரூவ்ட் ஆனால் இயக்குனர் சைக்காலஜி ஹாஸ் ஸோ டேமேஜ்ட், கணணி வரைகலையை இப்ப உள்ள படத்துல பார்த்து கண்கள் அவிந்து போனதுதான் மிச்சம் என்று சொல்லும் அளவிற்கு கதாநாயகன் கைய தூக்குனா மின்னல் வெட்டுது, கால தூக்குனா பொறி பறக்குது, கதாநாயகி நடந்து வரும்போது கலர் கலரா உடை மாறுது என்ற மாயை கலர்களை வெளுத்து சிங்கார சென்னையை கருப்பு வெள்ளையில் அழகாக காட்டுவதற்கு கணணி வரைகலையை பயன் படுத்திய இயக்குனருக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

இப்படி பல இடங்களில் வெளுத்து வாங்கி,

தமிழ் சினிமாவில்
கதைக்கு இல்லை வெற்றிடம்
சதைக்கு இல்லை புகளிடம்
நல்ல இயக்குனரிடம்
மனம் இருந்தால் எடுக்கலாம்
மதராசப்பட்டினம் போல் வெற்றிப்படம்

மதராசப்பட்டினம் – இன்றைய தமிழ் சினிமா இயக்குனர்களின் மன அழுக்கை வெளுக்க வந்த வண்ணாந்துறை.

எனக்கு சாதி பிடிக்கும், மதம் பிடிக்கும்

சத்தியமாய்
சாதிப் பிடிக்காது
ஆனால்
மதம் பிடிக்கும்.

மதம் பிடிக்கும்
சில சமயங்களில்
எனக்கு
சாதியைப் பிடிக்கும்

சண்டாளா
சாதி மதம் பிடிக்காதென்று
பதிவு எழுதி பேசியது?

பேசியது உண்மைதான்...
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
அதை மீண்டும் உணர்த்திச் சொல்லப் பதிவு

பதிவெழுதி பதிவெழுதி
பலவேலைகளை நான் கால தா-மதம் செய்தும்
அதை பொருட்-படுத்தாத
என் பெண்-சாதியை பிடிக்கும்
அதை பொருட்-படுத்தினாலும்
மதம் பிடிக்காத பெண்-சாதியை பிடிக்கும்

தா-மதம் தா-மதம் என்றாலும்
இன்னுமொரு இடுக்கை இடவில்லையா
என பதிவெழுத சம்-மதம் சொல்லும்
மதம் பிடித்த பெண்-சாதியை பிடிக்கும்.

குடைச்சல்...

ஒருவன்தான் உணவுண்டேன்
சோற்றுடன் கறி ஒன்று
ஒழித்துப் போட்டேன்
பத்துப்பசை பாத்திரங்கள் ஒன்பது
கழுவிப் போட்டேன்
கையெல்லாம் வலி குடையுது

என்னவளை எண்ணினேன்
நித்தம் கறி இரண்டு
ஒழித்துப் போடப்போட
வற்றா பத்துப்பசை பாத்திரங்கள்
கைவலித்ததாய் செவிமடிக்கவில்லை
மனதெல்லாம் வலி குடையுது

கவி.பர்வீன் சுல்தானாவிற்கு நன்றி

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்பது – அன்று
கருணாநிதி வீட்டிக் கட்டில்தறி கவிபாடியது – இன்று

கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிதையாய்
பாரில் இனி உன் தமிழ் சொல் தானா?

அவையில் உங்களை
பேசச்சொல்லி அழைத்தவர் துணைத்தலைவர் ரவி
கேட்டு ரசித்ததோ அவையில் உள்ளோரின் செவி.

தலைப்போ சிகரம் தொட்டு
தலைப்போ “பெண்மையின்” சிகரம் தொட்டு
திகைத்தோம் உங்கள் உரையைக் கேட்டு
காரணம் – நீங்கள் பேசியவை
ஒவ்வொன்றும் எங்கள் மனதைத் தொட்டு.

நீங்கள் பேசியதெல்லாம் பெண்ணின் “சுயம்”
அதைக்கேட்ட ஆண்களுக்கு சற்றே பயம்.

அகநானூறு சொன்னீர், புறநானூறு சொன்னீர்
ஆம், அகம் சொன்னீர், புறம் சொன்னீர்
அகமோ, புறமோ
உங்களால் இந்த முத்தமிழ் விழாவில் நாங்கள் பெற்றது
தமிழ் எனும் சுகம் சுகம் சுகம்.

கொசுத் தொல்லை...

அமெரிக்கா வந்த ஐந்து ஆண்டுகளில் நான் (ஏன் இந்த கொசுக் கடிய ஒவ்வொரு தேசியும் அனுபவிச்சி இருப்பாங்க) அதிகம் கடி பட்டது இரண்டு கொசுக்களிடம். ஒன்று தேசிக் கொசு, மற்றொன்று விதேசிக் கொசு. இந்த ரெண்டு கொசுக்களை அடையாளம் காணுதல், அவற்றை கையாளுதல் மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். நகச்சுவைக்காக மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல.

தேசிக் கொசு:

இந்தக் கொசு தேசியை மட்டும்தான் கடிக்கும். இது மளிகை கடை, காய்கறி கடை மற்றும் வால்மார்ட் போன்ற தேசிகள் அதிகம் நடமாடும் இடங்களில் தென்படும். இது உங்களை பார்த்தவுடன் சிரிக்கும், நீங்கள் பதிலுக்கு சிரித்தவுடன் (சிரிக்கா விட்டாலும்) உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று குசலம் விசாரிக்கும். பிறகு பழகுவதற்க்கும், தொடர் நட்பிற்க்கும் என்று சொல்லி உங்கள் தொலைபேசி எண்ணை கேட்கும். தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு மீண்டும் சந்திக்கலாம் என்றும், வீட்டிலிருந்தபடியே பணம் பண்ணலாம் என்றும் கடிக்கும். இந்த சிறுகடி ஒரு நாள் பெருங்கடியாக மாறும். இது ரொம்ப சமர்த்தான கொசு கடைசி வரை ஏன் கடிக்கிறேன் எதுக்கு கடிக்கிறேன் என்று சொல்லாது... ஆனா கடிக்கும். இந்த கொசு உங்களை ஒரு வியாபார குழு சந்திப்பிற்க்கு அழைக்கும், உங்களுக்காக அது ஒரு இருக்கையை முன்பதிவு செய்திருப்பதாக சொல்ல... சிறுது நேரத்தில் ஒரு கொசுக் கூட்டம்... உங்கள் காதில் (கிழிய) ரத்தம் வர வர கடிக்கும். நீங்கள் கொஞ்சம் ஏமார்ந்தால் அன்றே அது உங்கள் மணி பர்சையும் கடிக்கும்.

இந்த கொசுக்களை நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். மேற்ச்சொன்ன இடங்களில் இந்தக் கொசு வெறும் வண்டியுடன் (எம்டி கார்ட்) சுற்றும்.
இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? அது மிகச் சுலபம். உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் வரும் மன மகிழ்வு தொலைபேசி எண்களை (உதாரணத்திற்கு, கொஸ்ட் எண்) நினைவு படுத்தி அதை அந்தக் கொசுவிடம் கொடுத்து விடுங்கள். பிறகு என்ன? உங்களுக்கு ஜாலி... கொசுவுக்கு டென்சன்.

விதேசிக் கொசு:

இந்தக் கொசு பெரும்பாலும் தொடர் குடியிருப்பில் உள்ள அனைவரையும் கடிக்கும். இது சனிக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் உங்கள் கதவை தட்டும். உங்கள் நாடு மற்றும் அமெரிக்கா பற்றிய சில நல்ல விசயங்களை கடித்துவிட்டு மெல்ல உங்களை சமயம் பற்றி கடிக்க ஆரம்பிக்கும். இந்த கொசு பரிசுத்த வேதகாமம், பழைய/புதிய ஏற்பாடுகளில் இருந்து சில நீதி/வசனம் என்று சொல்லியும், உங்களை வருகின்ற ஞாயிற்றுக் கிழமை கூட்டு பிரார்த்தனைக்கு வாங்க என அழைத்துக் கடிக்கும்.

இந்தக் கொசுவையும் நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். இந்தக் கொசு வீட்டிற்க்கே வந்து கதவை தட்டி கடிப்பதால், கையில் உள்ள விசயங்களை வைத்து முடிவு செய்து விடலாம்.

இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? இந்த விதேசிக் கொசு தேசிக் கொசுக்களைக் காட்டிலும் பல மடங்கு நல்ல கொசுக்கள். இதன் நோக்கம் நல்ல(?!) நோக்கம் என்பதாலும், கடிக்கும் போது நல்ல விசயங்களை சொல்லி கடிப்பதாலும் இந்தக் கடியை பொருத்துக் கொள்ளலாம். மேலும் இதை உங்கள் மன நிலைக்கும், பக்குவத்திற்க்கும் ஏற்ப்ப இதைக் கையாளலாம். உதாரணத்திற்கு, கார்ட் ப்ளஸ் அமெரிக்கா, பிறகு சந்திப்போம் என்று சொல்லி அனுப்பி விடலாம். இல்லை எனில் இந்தக் கொசு பரிசுத்த வேதகாமம் என்று ஆரம்பிக்கும் போது நீங்களும், பகவத்கீதை, சுலோஹம் 67, ஸ்ரீ பகவானுவுவாச்ச-ன்னு உங்க பராக்கிரமத்த (கடிதான்) காட்டலாம்.