லாவண்யா
சுந்தரராஜனின் இரவைப் பருகும்
பறவை
பாப்லோ
நெருதாவின் வாழ்க்கைக்கதையைப்
பின்னணியாகக் கொண்டு வெளிவந்த
”போஸ்ட்மேன்” திரைப்படம்
எனக்குப் பிடித்த படங்களில்
ஒன்று.
ஒரு
காட்சியில் நெருதா கடற்கரையோரம்
நடந்தபடி இருப்பார்.
காதலியின்
பொருட்டு கவிதைவேண்டி வந்த
அஞ்சல்கார இளைஞன் அவர்
பின்னாலேயே நடந்துவருவான்.
நெருதாவின்
நடையை,
எதையோ
அவர் தேடிக்கொண்டு நடக்கிறார்
என்று புரிந்துகொள்கிறான்
இளைஞன்.
“என்ன
ஐயா தேடுகிறீர்கள்?”
என்று
அப்பாவியாகக் கேட்கிறான்.
கவிஞர்
அவனை ஒருகணம் திரும்பிப்
பார்த்துவிட்டு “என் கவிதைகளுக்கு
படிமங்களைத் தேடுகிறேன்”
என்று விடை சொல்கிறார்.
அந்தக்
காட்சி என் மனத்தில் இன்னும்
பசுமையாகப் பதிந்திருக்கிறது.
காட்சிகளுக்காக
உடல்முழுக்கக் கண்களாக
விழித்திருக்கும் கலைஞனின்
தேடலை அடையாளப்படுத்தியிருந்தது
அக்காட்சி.
காலம்காலமாக
நம் கவிஞர்கள் கண்டடைந்த
காட்சிகளால் நம் இலக்கியங்கள்
நிரம்பியுள்ளன.
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகுகூட
அந்த அபூர்வமான காட்சிகளும்
அபூர்வமான தற்செயல்களும்
இன்றும் புதுமை நிறைந்தவையாக
உள்ளன.
கன்றும்
உண்ணாது கலத்திலும் விழாது
தரைமீது சொரிந்தோடும் பால்
என்பது ஒரு காட்சி.
வெள்ளிவீதியாரின்
கண்கள் அதை அழகான ஒரு கவிதையாக
மாற்றிவைத்துவிட்டது.
முற்றா
இளம்புல்லைச் சுவைக்கிற
மூத்த பசு இன்னொரு காட்சி.
அது
மிளைப்பெருங்கந்தளின் கண்களில்
பட்டு மற்றொரு கவிதையாக
மாறுகிறது.
எரிமுன்னர்
வைத்தூறு அழிவது ஒரு காட்சி.
வள்ளுவரின்
கண்கள் அதைப் பொருத்தமாகப்
பயன்படுத்தி மறக்கமுடியாத
ஒரு கவிதையாக வடித்துவிட்டன.
எல்லாக்
காலங்களிலும் படைப்பின் ஆதார
வலிமையாக இருப்பது இப்படிப்பட்ட
காட்சிகள்.
காட்சிகளுக்கான
தேடல் லாவண்யாவிடம் இருப்பதே,
அவருக்குள்ள
முதல் தகுதி.
அதற்கான
அடையாளம் அவர் கவிதைகளில்
உள்ளது.
”இலையோடு
ஓடும் ஓடை” இத்தொகுதியில்
முக்கியமான கவிதைகளில் ஒன்று.
அடுத்தடுத்து
நிகழக்கூடிய இரண்டு தற்செயல்கள்
இக்கவிதையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
மரத்திலிருந்து
விழும் ஓர் இலை திக்குத்
தெரியாமல் மிதந்து மரத்தடியில்
ஓடிக்கொண்டிருக்கிற ஓடையொன்றில்
விழுகிறது.
இலைக்கு
எவ்விதமான பற்றும் இல்லை.
ஓடை
இழுத்த இழுப்பில் ஓர் ஓடம்போல
நகர்கிறது.
இது
ஒரு தற்செயல்.
அங்கே
தெறித்து விழுந்த ஒரு நீர்த்துளி
ஓடம்போல நகரும் இலையின்மீது
தற்செயலாக விழுகிறது.
இது
அடுத்த தற்செயல்.
மிதக்கும்
இலைமீது நீர்முத்து.
குழந்தையைத்
தாலாட்டுவதுபோல நீர்முத்தைத்
தாலாட்டுகிறது இலை.
இக்காட்சிமீது
நாம் அர்த்தங்களின் சுமையை
ஏற்றுவது எளிது.
எதார்த்த
வாழ்வோடு இணைத்து,
அதற்கு
ஒரு பொருளை நாம் வழங்கலாம்.
அது
காற்றில் பறக்கிற ஒரு பட்டத்தை,
தரையை
நோக்கி இழுப்பதுபோல.
நிச்சயமாக
அது பார்வையின் ஒரு கோணம்.
காட்சியை
அது வழங்கக்கூடிய பரவசத்துக்காகவே
பார்க்கலாம் என்பது இன்னொரு
பார்வை.
”பூவொன்று”
என்பது இன்னொரு கவிதை.
மஞ்சள்
மலர்களை உதிர்த்தபடி நிற்கிறது
ஒரு மரம்.
நிழலுக்காக
அம்மரத்தடியில் ஒதுங்கி
நிற்கிறது ஒரு பேருந்து.
முன்கண்ணாடியில்
மலர்கள் விழுகின்றன.
விழும்
மலர்களை கண்ணாடியின் வைப்பர்
தாங்கியிருக்கிறது.
வைப்பரால்
தாங்கமுடியாத மலர்கள் தரையில்
உதிர்ந்துபோகின்றன.
புறப்பட்ட
பேருந்தில் வைப்பர் இயங்கத்
தொடங்குகிறது.
பூக்கள்
ஒவ்வொன்றாக உதிர்கின்றன.
பெண்டுலமாக
ஆடுகிற வைப்பர் கம்பியில்
சிக்கி சில பூக்கள் கிழிந்து
சிதறுகின்றன.
சிதறவும்
முடியாமல் பொலிவுடன் இருக்கவும்
முடியாமல் சிக்குண்டு
அலைக்கழிக்கப்பட்டு
கசக்கப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன சில பூக்கள்.
கவிதையைப்
படித்து முடித்ததும் எவ்வளவு
அழகான கவனிப்பு என்று எண்ணத்
தோன்றுகிறது.
பெண்களா,
ஏழைகளா,
குழந்தைகளா,
யார்
அல்லது எது இந்தப் பூ என்றொரு
கேள்வியை முன்வைத்து,
இக்கவிதைக்கு
பல தளங்களை உருவாக்க முடியும்.
எந்தத்
தளத்தை நோக்கியும் செல்லாத
நிலையில்கூட இக்காட்சியின்
எளிய அழகு மனநிறைவை அளிப்பதாகவே
உள்ளது.
லாவண்யாவின்
கவிதை இத்தோடு முடிந்திருந்தால்
நன்றாக இருந்திருக்கும்.
அவருடைய
அதீத ஆர்வத்தால் அவரும்
அக்காட்சியின் ஒரு பகுதியாக
மாற நினைத்துவிடுகிறார்.
அதன்
காரணமாக,
காலத்தைத்
தாண்டிய சித்திரத்தன்மை உள்ள
ஒரு காட்சியை,
எதார்த்தத்தளத்துக்கு
இசைவான ஒன்றாக மாற்றும்வகையில்
நான்குவரி கூடுதலாக எழுதிவைக்கிறார்.
சின்னஞ்சிறு
வெளிச்சமாக கிளையிடை நுழைந்து
பெருமர நிழலில் இளைப்பாறும்
வெயில் என்பது அவர் காட்டும்
இன்னொரு காட்சி.
வெயில்
கடுமை தாளாமல் நிழலில்
இளைப்பாறும் மனிதர்கள் உண்டு.
விலங்குகளும்
உண்டு.
வெயிலே
வந்து இளைப்பாறும் காட்சியின்
சித்தரிப்பு மிகநல்ல
வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.
”அழகிய
கோலங்கள் கூட வாசல் தாண்டி
உள் வருவதில்லை” என்ற வரியும்
படித்ததுமே மனத்தில்
பதிந்துவிடுகிறது.
”நிகழ்வின்
பின்” என்னும் கவிதை சில
காட்சிகளின் தொகுப்பாகவே
உள்ளது.
உணவருந்திய
மேசைமீது கை துடைத்தெறிந்த
காகிதங்கள் ரோஜாப்பூவாக
மலர்ந்திருக்கின்றன என்பது
ஒரு காட்சி.
பெருமழை
தீர்ந்த பின்பொழுதில்
கண்ணாடியில் சிறிதும் பெரிதுமாக
மழைத்துளிகள் பூத்திருக்கின்றன
என்பது இன்னொரு காட்சி.
மனசோடு
தங்கியிருக்கிறது அசைந்தசைந்து
மெல்லக் கடந்த யானையின்
மணியோசை என்பது மற்றொரு
காட்சி.
முதல்
இரண்டு காட்சிகளைவிட மூன்றாவதாக
உள்ள யானையின் மணியோசைக்கு
கூடுதல் அழுத்தம் உண்டு.
பூவாக
உருவகிக்கப்படுகிற காகிதமும்
மழைத்துளியும் கண்முன்னால்
இன்னும் உள்ளன.
மணியோசைக்கு
அப்படி எந்த இருப்பும் இல்லை.
யானை
அசைந்து அசைந்து கடந்துபோய்விட்டது.
மணியோசையும்
இல்லை.
ஒரு
பெளதிக இருப்பு சூட்சும
இருப்பாக மாறி,
பெளதிகத்தை
மனத்தடியில் சுட்டியபடி
இருக்கிறது.
சூட்சும
இருப்பை முன்வைக்கும் மற்றொரு
கவிதை ”மழை சென்ற பின்னே”.
மழை
பொழிந்து நின்று விடுகிறது.
மழையில்
தெப்பமாக நனைந்த மரங்களெல்லாம்
பசுமையைப் போர்த்தியிருக்கின்றன.
மழையின்
நினைவாக ஈரத்தை வைத்துக்கொள்கிறது
காற்று.
மழையின்
அடையாளமாக தரையும்
குளிர்ந்திருக்கிறது.
மழை
இல்லை.
ஆனால்,
மழையின்
அடையாளத்தை ஒவ்வொரு உயிரும்
பொருளும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
மீன்குட்டிகளும் பிளாஸ்டிக் பை நீரும் கவிதையும் மிக இயல்பான ஒரு காட்சியிலிருந்து கிளைத்தெழும் கவிதை. புதிதாகப் பிறந்த மீன்கள் விற்பனைக்காக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டுள்ளன. பிறந்த இடத்தின் நினைவுகளாக பிளாஸ்டிக் பையெங்கும் உயிர்காக்கும் நீராக நிறைந்திருக்கிறது. ஆசையோடு அதை வாங்கிச் செல்கிறது ஒரு குழந்தை. பிளாஸ்டிக் பையிலிருந்து மீன்கள் தொட்டிக்கு மாற்றப்படுகின்றன. மலங்க மலங்க விழித்த மீன்குட்டி தொட்டி நீருக்கு சிறுகச்சிறுகப் பழகி, நீந்தத் தொடங்குகின்றன. பழகுவதிலும் இசைந்துபோவதிலும் வலி இல்லாமல் இருக்காது. ஆனால் நீந்துவது அல்லவா மீன் வாழ்க்கை? அது குட்டையாக இருந்தால் என்ன, தொட்டியாக இருந்தால் என்ன?
(02.01.2012
அன்று
நடைபெற்ற காலச்சுவடு கவிதைநூல்கள்
வெளியீட்டு நிகழ்ச்சியில்
லாவண்யா சுந்தரராஜனின் “இரவைப்
பருகும் பறவை” கவிதைத்தொகுதியை
வெளியிட்டு நிகழ்த்திய உரையின்
எழுத்துவடிவம்)