கவிஞர் எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் என்று பன்முக திறமை கொண்டவர் சந்திரா. இவரை பற்றி நான் அறிமுகம் செய்வது மிளகு காட்டில் மிளகை பேனாவால் வரைந்து இது தான் மிளகு என்று சொல்வதற்கு ஒப்பானது. இவரது மிளகு தொகுப்பு கோட்டை தமிழ் முற்றம் விருது பெற்றது. வேலூர் கோட்டைக்கும் எனக்கு சில சில நினைவுகள் உண்டு. ஓரிருமுறை சென்றிருக்கிறேன். இப்போது கோட்டை தமிழ் முற்றம் விருது நிகழ்வுக்காக பேச முடியுமா என்று கயல் என்னைக் கேட்டுக் கொண்ட போது தயக்கமேயின்றி ஒப்புக்கொண்டேன். காரணம் வேலூர் கோட்டை தமிழ் முற்றத்தின் நிறுவனர் ஒரு பெண். கயல்விழி என்ற என் அன்புதொழி. அதன் முதல் விருதை பெற்றது சந்திரா என்ற பெண் கவிஞர். இவ்விரு காரணங்களாலேயே எந்த ஒரு மறுபேச்சுமில்லாது சந்திராவின் மிளகு தொகுப்பு பற்றி நான் பேச ஒப்புக்கொண்டேன்.
சந்திரா இந்த தொகுப்பில் ஒரு கவிதையில் மூங்கில் மலர்கள்
என்ற ஒரு பதத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். திருச்சிப் போன்ற கந்தக பூமியில்
பிறந்தவளுக்கு பசுமை என்பது நெற்பயிறிலும் வாழையிலும் மட்டுமே பரிச்சயம். மூங்கில்களை
பார்ப்பதே அறிது. அது பூக்கவும் செய்யும் என்பது அதிசயமல்லமல் வெறென்னவாக இருக்கும்?
பின்னர் இணையத்தில் தேடி மூங்கில் மலர் எப்படியிருக்குமென்று பார்த்தேன். அது இளஞ்சிவப்பு
நிறத்தில் ஆடை அணிந்த நடன மங்கை மயில் தோகை விரிந்தாடுவது போல தனது நடன ஆடையின் மடிப்புகள் விரிந்து நிற்கும்
ஒரு நொடி நேரத்தை உறைய வைத்து புகைப்படம் எடுத்தது போல இருந்தது. அப்படிப்பட்ட மூங்கில்
மலரை அழகை தரிசிக்க காரணமான கவிதைக்கு இந்த உரையை சமர்ப்பித்து இந்த உரையை தொடங்குகிறேன்.
மூங்கில் மலர் மட்டுமல்ல இவரது கவிதைகள் வழியாக புதுப்புது பறவைகள், மலர்கள், செடிகள், புல்வகை, மரங்கள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளது என்ற விதத்தில் இந்த கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இந்த தொகுப்பில் 100 கவிதைகள் இருக்கின்றன. இது "மலை என்பது ஒரு நீளமான மரம்", "புறக்கணிப்பின் புற்றில் வாழ்கிறேன்", "நானொரு வெட்டப்பட்ட மரம்" என்ற மூன்று கவிதை தொகுப்புகளை உள்ளடக்கிய கவிதை தொகுப்பு. இந்த தொகுப்பில் நான்கே வரிகளோடும் கவிதைகள் இருக்கின்றன. நான்கு பக்கத்துக்கு விரியும் கவிதையும் இருக்கிறது. கவிதைகள் எந்த வடிவம் கட்டுபாடும் இல்லாத free format ல் இருக்கின்றது. சில கவிதைகள் பத்திகளாக பிரியும் சாத்தியங்கள் இருந்தாலும் ஒரே பத்தியாக எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த கவிதைகளில் கவிதையை சொல்வது சிறு பெண், பதின்பருவ பெண், விடலை காதல்
கொள்ளும் பெண், நடுவயது குடும்பப் பெண், கட்டுபாடுகளை துறந்த நாடோடிப் பெண், திரைத்துறையில்
இயங்கும் பெண், மலையத்தி, ஒரு சில இடங்களில் கவிதை சொல்லியின் பாட்டி, அம்மா என்று
எல்லா வயது பெண்களும் அவர்களோடு சில ஆண்களும் இருக்கின்றனர்.
சந்திராவின் கவிதையில் மலை மிளகின் வாசனை, கோடி ரோஜாக்களின் நறுமணம்,
ஆரெஸ்வதி தைல வாசம், தாழம்பூ நாற்றம், பவளமல்லியின் மென்மணம் என்று பலவித மணம் கவிதையிலிருந்து
என்று பிரித்தறிய முடியாத அளவு வீசுகிறது. பசிய பசிய வாழும் மலை திடிரென துரத்துப்பட்ட நகரத்துக்கு
வந்த திரும்ப விளைந்தும் திரும்பப் போகமுடியாமலும் வெறுப்பின் துர்நாற்றத்தையும்
வீசுகிறது
பிரம்மாண்டத்தை சொற்றொடரில் அடக்கும் மாயவித்தையை சந்திராவின் சில கவிதைகள்
செய்கின்றன. அதில் ஒன்று மலையை “பேழைக்குள் ததும்பும் நீராய்” அசைக்கிறது. இந்த கவிதை ஒரு இன்பமான மனநிலையை குறிக்கும் சொற்களால்
எழுதப்பட்ட கவிதை. அந்த கவிதையில் எழுதப்பட்ட வரிகளாலே சொல்வதென்றால் “சாய்மானம்
இல்லாமல் நிலம் மேலும்புகிறது/ செம்மறி ஆடுகள் பறக்கின்றன” என்பது பரவச மனநிலையை குறிக்கிறதென்றாலும்,
மலையை நிலத்தை கண்ணீர் ததும்பும் விழிகளோடு பார்த்து எழுதப்பட்ட வரிகள் போலவும் தோன்றுகிறது,
மன நிறையும் போதும் சில சமயம் கண்கள் நிறையும் அல்லவா அப்படி எடுத்துக்கொள்ளலாம்.
அதே போல “என்னோடு வாழ்வது” என்ற கவிதையில் “அத்தனை எளிதல்ல/ஒரு மலையை பிடிங்கி/உன் வீட்டுக்குள் வைத்துகொள்வது” இவ்வரிகள் ஒரு பெண்மையின் பிரமாண்டத்தை, அவள் சக்தியை, அரூபமாய் அவளை சூழ்திருக்கும் பேருலகை பெருங்கனவை மூன்றே வரிகளில் அடக்கி அவ்வளவு கூர்மையாக சொல்லிவிடுக்கிறது.
“மலையை காலணியாக அணிதல்” என்ற தலைப்பிட்ட கவிதையும் உண்டு. அதன் முதல்
வரி “சதா மலை மீது நடந்து கொண்டிருக்கிறேன்” என்பது ஒரு பிரம்மாண்டமான காட்சியை கண்முன்
நிகழ்த்துகிறது. மலையில் நடப்பது அதாவது மலையே காலோடு எடுத்துக் கொண்டு நடப்பதும் என்பதே
அந்த காட்சி. இன்னொரு கவிதையில் சிறுமியின் விளையாட்டு பொருளாகிறது மலை, அவள் விரல்களாய்
அதை அசைக்கும் போது குறுமிளகாய் எம்பி குதிக்கிறது. அது ஒரு மாய எதார்த்த விளையாட்டு.
இந்த ஒரு கவிதையில் மட்டுமில்லாமல் பல கவிதைகளில் மாய எதார்த்தம் மிக
அசாதாரணமாய் வந்து போகிறது. “மாய இழை” என்ற கவிதையில் வரும் எல்லாப் பெண்களின் ஆடைகளிலிருக்கும்
பூக்கள் பறப்பது போல காட்சி இருக்கிறது. ஆனால் அந்த கவிதையில் தொடக்கம் பதின்வயதை நெருக்கும்
ஒரு பெண்ணின் சோகத்தை அவமானத்தை சொல்லத் தவிக்கிறது. ரத்தக்கறையை கழுவும் பெண் ஒரு
படிமம். அந்த படிமத்தை வளர்த்தெடுத்திருந்தால் கவிதை வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்திருக்கும்.
மலையடிவாரமும் அடிவானமும் கலக்கும் மாய இடம் இன்னொரு கவிதையில் கவிதை
சொல்லி ஏறிபார்க்க விரும்பும் மாயநிலமாகவும் அங்கிருந்து அவர் திரும்பி வர விரும்பாத
மனமும் பதிவாகியிருக்கிறது. நமக்கும் அங்கிருந்து திரும்ப பிடிக்கவில்லை…
சந்திராவின் இன்னொரு கவிதையில் “மலையை சேர்ந்தவளின் பாதத்திலிருந்து
உயர்திருக்கிறது மலை. கடல் சார்ந்தவனின் பாதங்களில் கடல் பெருகிறது.” ஒவ்வொரு பிரதேச
மனிதர்களின் உடல்மொழி அவர்கள் ஊரை காட்டிக் கொடுக்கும் அந்த மாயத்தை எழுதிச் செல்லும்
கவிதை “அறை காலியில்லை”
மலைகுடிகளை மலையின் ஆதி மைந்தர்களை அதிகாரம் அழித்தது போல வரும் கவிதைகளில்
சந்திராவின் அரசியல் பார்வையும் கூடவே “மலை விழுங்குதல்” என்ற கவிதையில் கவிதைசொல்லி
தன்னை தன் நிலத்திலிருந்து அப்புறபடுத்தும் அதிகாரியின் கண் முன்னே அவளுக்கு தூரத்தில்
தெரியும் மலையை விழுங்குகிறாள் அன்றிலிருந்து அவள் கண்களில் மலைநதி பாய்கிறது. துயரமான
தருணத்தையும் மாய எதார்த்த மொழியில் செய்து பார்க்கும் வித்தை சந்திராவுக்கு மிக அழகாக
கைகூடியிருக்கிறது.
சொந்த நிலத்திலிருந்து துரத்தப்படும்
மக்களின் பாடுகளை பல கவிதைகளில் பதிவு செய்கிறார் சந்திரா. அவை கண்ணீர் பிழியும் கவிதைகளாக,
மனதை துளைக்கும் கவிதைகளாக மட்டுமல்லாது கவிதைக்கான அழகியலோடு இருக்கின்றது. அரசியல்,
சோசியலிசம் சார்ந்த கவிதைகள் எழுதுவது கத்தி மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் பிசகினால்
அவை புரட்சி கூச்சல்களாய் மாறிவிடும் அபாயம் உண்டு. அப்படியில்லாம் ஆதிகுடிகளின் நிலம்
அபகரிக்கப்பட்ட அரசியல், நிறம் அரசியல் இவற்றையெல்லாம் பல பரிமாணங்களில் கவிதையாக்கியிருக்கிறார்
சந்திரா.
வான்கோவின் ஓவியம் என்ற கவிதையில் புரட்சிக்காரர்களுக்கு அதிகாரிகளுக்கும்
இடையில் ஓவியம் எல்லைகோடுகளாகி புரட்சிக்காரர்களை ஓவியத்துக்குள்ளும் கவசதொப்பிக்காரர்களை
ஓவியத்துக்கு வெளியிலும் நிறுத்துகிறது. மிகமிக வித்தியாசமான கற்பனை மிக அழகான கவிதையும்
கூட.. மலை நில அபகரிப்பு மட்டுமல்ல தற்கால அரசியலையும் பகடி செய்யும் கவிதைகள் சிலதும்
உண்டும் “உங்கள் ரெஃப்ரி காவி உடை அணிந்திருக்கிறார்” கவிதை மாட்டிறைச்சி அரசியல்,
ராமஜென்ம பூமியின் அரசியல் தத்துவங்களை சார்ந்து கேள்வியெழுப்புகிறது. சந்திராவின்
காதல் கவிதைகளில் கூட அரசியல் எட்டிப்பார்க்கிறது சில பெண்ணியமும் பேசுகிறது.
பெண்ணியம் பேசும் கவிதைகளில் இரண்டு பெண்கள் கவிதை மிக சிறப்பானது.
“ காலம் வந்தால் இலவம் காய்க்குள் அடங்குமா/அது
பறந்து பறந்து எங்கு செல்லும்/எப்படியும் ஒரு மெத்தைக்குள் மூச்சு முட்டி சாகும்” வளரிளம்
பெண் கன்னிமை கனவுகளோடு குடும்ப வாழ்வில் நுழைந்துவதும். நிசர்தனம் சில சமயம் அவள்
கண்ட கனவுக்கு வெளியே பெரு அதிர்ச்சி தரும் வண்ணமிருக்கக்கூடும் என்பதை இவ்வளவு எளிதான
வார்த்தைகளில் சொல்லிவிட முடிகிறது சந்திராவால்.
“என் அறை ஜன்னல் / எனக்கு எட்டாத உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது”
என்ற மற்றொரு கவிதையின் வரிகளில் தனக்கான கட்டுபாடுகள் கொடுக்கும் அதீத திணறலை வெளிப்படுத்தியிருக்கும்
கவிதை சொல்லி “கதவைத் திறந்து வெளியேறி செல்ல/ எனக்கு எல்லா நியாயங்களும் இருக்கிறது”
என்று மற்றொரு கவிதையில் குடும்ப அமைப்பிலிருக்கும் கோளாறுகளை பதிவு செய்கிறார். அதோடு அந்த அமைப்பை விட்டு வெளியேற முடியாத அவலத்தையும்
சேர்த்தே பதிவிடுகிறார். திரைத்தொழிலில் பொருட்டு பெண் உடலை அவமானம் செய்யும் குரூரத்துக்கு
மௌன சாட்சியாய் இருக்க வேண்டிய குற்ற உணர்வு பொங்கும் கவிதையையும் இங்கே நினைவில் கொள்ள
வேண்டும்.
சிறுவயத்தில் பெண்கள் இயல்பாகவே நிறத்தையும் வடிவத்தை முன்னிட்ட செய்யப்படும்
கேலிகளால் அடையும் தாழ்வு மனப்பான்மையை மிக அழகாக சில கவிதைக்குள் கொண்டு
வந்திருக்கிறார் சந்திரா. சிறுவயதில் கறுப்பாக இருக்கிறேன் என்ற நினைக்கும் பெண்
மாதளிரின் மினுமினு நிறம் அவ்வளவு அழகானதென்று உணர்வதற்கு பல வருடங்கள் எடுக்கும்.
சிறுவயதின் புறக்கணிப்புகள் என்றைக்கும் ஆராத வடுவாகிவிடுகிறது. பல
வருடங்களுக்கு முன்னர் குழந்தையின் வளர்ச்சியை பார்த்தே வயது முடிவாகியது. பள்ளிக்கு
சேர்க்கும் போது வலது கை தலையை சுற்றி இடது காதை தொடவில்லை என்றால் பள்ளியில் சேர்க்கமாட்டார்கள்.
அந்த புறக்கணிப்பு குழந்தைக்கு எந்த மனநிலையை ஏற்படுத்தும் என்பதை தனது கவிதையில் அற்புதமாக
கொண்டு வந்திருப்பார் சந்திரா. ஒவ்வொரு புறக்கணிப்பும் கவிதைசொல்லியை நாய் போல் குரைக்கச்
செய்தது என்பது ஒரு குறிப்பு. புறக்கணிப்பை தாங்கிக் கொள்ள கவிதை சொல்லி கவன ஈர்ப்புக்காக
ஏதேனும் செய்யும் விசித்திரத்தை குறிப்பிடுகிறது. என்னருமை சிறு குருமிளகே என்று
அன்று இந்த கவிதைசொல்லியை யாராவது வாரி அணைந்து ஆற்றுபடுத்தியிருந்தால் இந்த கவிதைகளை
ஒருவேளை நாம் இழந்திருக்கக் கூடும். இன்னொரு கவிதையில் நீ பிறந்த போது கறுத்த எலிக்குஞ்சு
போலிருந்தாய் என்று எழுதியிருக்கிறார். இந்த நிற அரசியல் காலம் காலமாய் இன்னும் தொடரும்
பிரச்சனை.
சந்திராவின் பல கவிதைகளில், பால்யத்தை நோக்கி திரும்ப விழையும் பேரிச்சையையும்
தொடர்ந்து பதிவாகிறது “தன்னை ஆளுயர கண்ணாடி நிறைத்து வைத்திருப்பதை பார்த்தவள் அதை
அள்ளி அள்ளி வெளியே உற்றினாள். சிதறிய துண்டுகளிலெல்லாம் அவள் பட்டுத்துணியணிந்த அவளது
பொம்மைகள் சிரித்தன.” இப்படிச் சொல்லும் வரிகளில் கவிதைச் சொல்லி பொம்மை வைத்து விளையாடும்
சிறுமிக்கு திரும்ப ஏங்குவது புரிகிறது.
இன்னும் பல கவிதைகளில் இந்த ஏக்கம் பொதித்து வைக்கப்பட்டிருக்கிறது
“கடந்தகாலத்தை நத்தையின் முதுகில் ஏற்றிவிட்டாய் அது தார்ச்சாலையில் பொசுங்கியபடி வந்து
கொண்டிருக்கிறது” என்ற வரிகளில் கடந்தகாலத்தில் இழந்தவற்றை ஒரு காலஇயந்திரம் போல ஆரஞ்சு
விற்கும் சிறுமியின் கூடைக்குள் ஏறி சென்று சரிசெய்ய விழைகிறது.
மலைக்காட்டின் வசந்தகால சிறுமியோ சந்திராவின் கவிதையில் தான் ஊதித்தள்ளிய
வசந்த கால காற்று வளையத்தை பற்றிக் கொண்டு நகரத்தின் அங்காடித் தெருவில் வந்து இறங்குகிறாள்
அதன் பகட்டில் மயங்கி நகரிலிலே தொலைந்து போகிறாள். அவள் வசந்தகாலம் அவளை தேடுகிறது.
இன்னும் பல கவிதைகளில் தொலைந்த பால்யத்தை, வேலைக்காக விட்டு பெயர்ந்த
பசும் மலையை, பால்ய நினைவுகளை பதியனிடுகிறது. மிளகு தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின்
நிலம் மலையும் மலைக்காடும் அங்கேயிருக்கும் பலவித வாசனைகளும் வண்ணங்களும். சில கவிதைகள்
கடலும் கடல் சார் நிலப்பரப்பின் கவிதைகள்.
ஆகவே தன்னிச்சையாக சில கவிதைகள் சங்ககவிதையின் நீட்சியாக பரிமளிக்கின்றன. மரையா
என்ற கவிதையில் பின்குறிப்பாக திணை குறிஞ்சி
என்றும் பொழுதுகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
அந்த கவிதையில் திணையில் கருபொருளான கூடலும் கூடல் நிமித்தமும் என்று
தொடங்கி இடையிலேயே திணை மயக்கமாய் ஊடலும் ஊடல் நிமித்தமாய் மாறுகிறது.
கானவா என்று இன்னொரு கவிதையில் வேங்கை மலர் உதிரும் தருணம் கவிதை சொல்லியின்
உடல் சிறுக்கிறது. இன்னொரு கவிதையில் ஜன்னலிலிருந்து பார்க்கும் துண்டு நிலம் போன்ற
மலையும் அதன் உச்சியில் பூக்களை உதிர்க்கும் மஞ்சக்கடம்பமரம் அதை உணரும் மனக்கண். இவ்விரண்டு
கவிதையுமே கொன் ஊர் துஞ்சுதும் யாம் துஞ்சலமே சங்க கவிதையின் தொடர்ச்சி போலவே
எனக்குத் தோன்றியது. நொஞ்சி மலர் உதிரும் ஓசையை கேட்கும் தலைவியை ஒத்தவளே வேங்கை மலர்
உதிர்தலை, கடம்ப மலர் உதிர்தலை உணரும் கவிதை சொல்லி.
மேலும்
ஐந்திணையிலும் சொல்லப்படாத நம் வாழ்வு கவிதையும் சங்கத்தின் நறுமணத்தை கொஞ்சம் பூசிக்
கொண்ட வருகிறது. போதை புல் மீது முல்லைப் பூவாய் மினுக்குகின்றன பனித்துளிகள் என்ற
இடமும் சங்க கவிதையின் உவமை நயத்தை நினைவுக்குள் கொண்டு வருகிறது
வட்டார வழக்குகள், புதிய வார்த்தைகள் (காடோடி), இதுவரை நாள் கேள்விப்படாத
பூக்கள் மரங்கள் பறவைகள் என்ற பல சொற்களை தேடியறிந்து கொள்ள இந்த தொகுப்பு எனக்கு பெரிதும்
உதவியாக இருந்தது. பருப்பலகை என்பது தேனீ வட்டார வழக்காக இருக்கலாம். போதை புல்
என்பது திருச்சிவாழ் மக்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
அது மட்டுமல்ல அடைக்கலாங்குருவி, காரிகை நோன்பு, வேங்கை பூ, பீனிக்குருவி,
அக்காக்கா குருவி(குயில்?), இருவாட்சி பறவை, தடிசம்பழம், இச்சிப் பழம் என்ற பலவற்றையும்
இந்த தொகுப்பில் முதல் அறிமுகம் கொள்கிறேன். அதெற்கென சந்திராவுக்கு ஒரு பிரத்தியோக
நன்றி.
சந்திராவின் கவிதைகளில் எனது தொழில்நுட்பத்தின் ஒரு கோட்பாட்டை காணும்
வாய்ப்பு கிடைத்தது.
எங்கள் தொழில்நுட்பத்தில் எல்லாமே தகவல்கள் தான். சுழியமும் ஒன்றும்
மட்டுமே. இந்த தகவல்களை சேமித்து வைக்க பல கட்டமைப்புகள்(data structures) உண்டு. அதில்
ஒன்று stack. அந்த கட்டமைப்பை நமது டிரங்க் பெட்டிகள் போல நினைத்துக் கொள்ளலாம். அதில்
நிறைய புத்தகங்களை அடுக்கி வைக்கும் போது கடைசியாக வைத்த புத்தகத்தையே முதலில் எடுக்க
முடியும் முதலில் வைத்த புத்தகத்தை கடைசியாக தான் எடுக்க முடியும். Last in first
out technique.
அப்படிப்பட்ட கட்டமைப்பில் ஒரு கவிதை “செம்பரிதியை நிறுத்துவது எளிது”
கவிதையில் சூரியன் மறையவில்லை -> காட்டெருமை மரிக்கிறது -> அது கோடி ரோஜாக்களின்
அழகில் மயங்கி நிற்கிறது -> அவை மழை பொழிவதால் மலர்கின்றன -> மழை மயில் ஆடுவதால்
பொழிகிறது -> மழை பொழிய மயில் ஆடுகிறது -> மழை பொழிவதால் ரோஜா பூக்கிறது ->
காட்டெருமை ரோஜை பார்த்தபடி சூரியனை மறைக்கிறது -> சூரியன் மறைய மருக்கிறது.
இத்தனை அழகான மலைக்காட்டில் கோடி ரோஜாக்களை பார்த்தபடி சூரியன் மறைய
மறுப்பது நியாயம் தான். கவிதையில் எந்த பிரம்மாண்டமும் சாத்தியமே. ஒரு காட்டெருமை கொண்டு
சூரியன் மறைவதை நிறுத்திவிடமுடியும்.
சந்திராவின் மொத்த கவிதைகளையும் இரண்டு உணர்வுதளத்தில் பிரித்துவிடலாம். innocent
love, tailer made eliteness. அறியாமையும் குழந்தைமையும் நிறைந்த அன்பு. சொல்லிக்கொடுக்கப்பட்ட
செய்யப்பட்ட நாகரிகம் என்ற செயற்கைத்தனம். சந்திராவின் கவிதைகள் வாழ்வது இரண்டு உலகத்தில்
மலைக் காட்டாலும், உப்பங்காற்று வீசும் கடல் அருகேயும். ஆகவே பசுமையும் பனியும் நிறைந்த
மலைக்காட்டிலும் அலையும் வெம்மையாலும், உப்பும் கசப்பும் நிறைந்த கடல் காற்றாலும்
கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த முரண்பட்ட உணர்வுகளும் நிலமும் அவரது கவிதைகளுக்கு
பல்வேற வரைவுகளை தருகிறது.
கவிதைகளில் களமும் உணர்வும் எவ்வளவு முரணானதோ போலவே அவர் கவிதைகளில்
வாழ்வதும் இருவேறு பெண்கள் ஒருத்தி பொருப்பான குடும்பத்தலைவி. இன்னொருத்தி கட்டற்ற
சுதந்திரம் கொண்ட நாடோடிப் பெண். அவர் காணும் உலகில் ஆண் கடல். பெண் மலை.
சந்திராவின் கவிதைகள் சமைக்கும் வாழ்க்கை இரண்டு துருவமுனைகளில் இருக்கிறது.
ஒன்று மலை வாழ் சிறுமியாக அது பன்னீர் கொய்யாகளை பந்து
போல உருட்டி விளையாடுகிறது, பெட்டிகடைகளை பலூன் வாங்கி விளையாடுகிறது, மிட்டாய்
கடிகாரங்களை கட்டிக் கொள்கிறது. அதே சமயம் இரன்டாவது நகரத்தில் படப்பிடிப்பில் நடிகையின்
கிளிவேஜ் இன்னும் நன்றாக தெரியட்டுமென்று தனது உதவியாளரிடம் சொல்லும் மிகவும்
பிராக்டிக்கலான பெண்ணாக பரிமளிக்கிறது. டார்க்கெட் முடிந்ததும் உயர்தர பப்பில்
ஆட்டம் போடுகிறது. அந்த நகரத்து பெண் தனது கையில் மிளகின் மணம் மிதக்கும் கட்டங்காபியை ஏந்தியபடி
நகர வாழ்க்கையோடு பொருந்தாமல் மலையையும் காட்டையும் தேடி ஏங்குகிறது. கடலில் உப்பை
கசகசப்பை பொருக்க முடியாமல் கடந்த காலமே என் அமைதி அமைதி என்று ஏங்குகிறது. இப்படியாக
இருதுருவங்களின் இடையே மிகப்பெரிய கடிகார பெண்டுடல்மாகி மாறி மாறி ஊஞ்சலாடுகிறது.
சந்திராவின் கவிதைகள் தூது புறாப் போல எப்போதும் கடலிருந்து மலையை
நோக்கியே திரும்புகிறது. மரணிக்கும் நேரத்தில் கூட மலைகாட்டின் அற்புதங்களை கண்டு
அதன்பின் உலகை வெளியேற ஆசைபடுகிறது. அதன் கவிதை சொல்லும் உள் விழைவு சாகும் வரை அங்கேயே
வாழ வேண்டும் அதாவது எப்போதும் அங்கேயே வாழ வேண்டும் இதற்கு காரணம் அவர் வார்த்தைகளிலேயே
சொல்வதென்றால் “சொர்கத்திலிருந்து” வந்தவர்களுக்கு அங்கே திரும்பி செல்ல நினைப்பது
நியாயமான ஆசை தானே?
கவிதைகளில் அவர் கொண்டு வந்திருக்கு பசுமையான மலைக்காடும் பனிக்காற்றும்
வாசிப்பவர்களுக்கே அங்கிருக்க வேண்டுமென்ற ஆசைவரும் போது அவர் பெரும்பாலான கவிதைகள்
மலையே மையம் கொள்வதில் ஆச்சரியமொன்றுமில்லை.
இந்த தொகுப்பில் எதுவுமே குறைகளே இல்லையா, இருக்கிறது கவிதைகளில் திரும்ப
திரும்ப சில உணர்வுகளும், ஒரே நிலப்பரப்பும் வருகிறது.
எவ்வளவு தான் அழகுடை நிலமாயினும் 100 கவிதைகளில் 95% கவிதைகளில் மலையும்,
கடலும் மட்டுமே நிறைந்திருப்பது பிற நிலங்கள் போறாமை கொள்ளும் விஷயம்.
சில கவிதை முடிந்த பின்னரும் தொடர்கின்றன அவை கவிதையின் அழுத்ததை கொஞ்சம்
நீர்த்து போக செய்கின்றன. அதற்கு ஒரு உதாரணம் “என்னுடன் வாழ்வதென்பது” இந்த கவிதையை
முதல் மூன்று வரிகளோடு முடித்திருந்தால் அதன் வீச்சு மிகப்பெரிதாகியிருக்கும். பின்வரும்
மூன்று வரி கவிதையின் செறிவை முற்றிலும் குலைக்கிறது.
அதே போல மேலும் சில கவிதைகளை என்னால் இந்த தொகுப்பிலிருந்து சுட்ட முடியும்.
கொஞ்சமே கொஞ்சம் எடிட் செய்திருந்தால் மிக சிறப்பானதாகியிருக்கும்.
சிலகவிதைகள் நிகழ்வுகள் திடீர் திடீரென தொனி மாறுகிறது. பத்திகள் சரியாக
பிரிக்கபட்டிருநதால் இந்த குழப்பம் கொஞ்சம் குறைந்திருக்கும். வருகின்றன. உதாரணத்துக்கு
நன்னிலக் கடவுள் என்ற கவிதையில் அப்பா இறந்த தூக்கத்தை பேசும் கவிதைசொல்லி அவள்
அம்மாவையும் அவர்கள் வீட்டு ஏழ்மையையும் பேசிக் கொண்டிருக்கும் போது கவிதை திடிரென
“டார்கெட் முடிந்தவுடன் இருட்டில் அந்நியனோடு உயர்தர பப்பில் ஓரு ஆட்டம் போடலாம்
என்று முற்றிலும் உணர்வுத்தளத்தில் மாறுகிறது. மேலும் சில கவிதையில் அடுத்தடுத்த வரிகளில்
உவமை ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாத விஷயம் வருகிறது. கவிதையில் எல்லாமே சாத்தியம்
என்றாலும் வாசிக்கும் கவிமனம் லயத்தோடு மேல் செல்ல இது ஒரு தடையாக வருகிறது. அதைத்
தவிர வேறு பெரிய குறைகள் எதுவுமில்லை.
முன்னரே சொல்லியது போல மூங்கில் மலர்களுக்கும், தடிச்சம் பழங்களுக்கும், கோடி ரோஜாப்பூக்களுக்காக சூரியனை மறைவதை ஒத்தி வைக்கும் காட்டெருமைக்கும் இந்த உரை சமர்பணம்.