நிகழ்ச்சியை நடத்துபவர் அஸ்வதன். நிகழ்ச்சிக்கு நடுவில் எதாவது புதுப்புது விசயங்களைச் சொல்வார். அவருடைய நிகழ்ச்சியை வாழ்த்தி நான் என்குரலில் ஒரு வாழ்த்து செய்தியையும் (பீ ஃகேர்புல்)அனுப்பி இருந்தேன். அதனை நிகழ்ச்சிக்கு நடுவில் ஒலிபரப்பி இருக்கிறார் . நன்றி அஸ்வதன்.
--------------------
நாங்கள் சின்னவயசா இருக்கும்போது நொறுக்குத்தீனிய “என்னமாச்சும்” ந்னு சொல்வோம். என்னமாச்சும் இருக்காம்மா? பிஸ்கட் இருக்கு , முறுக்கு இருக்கு, நெய்யுருண்டை இருக்குன்னு அம்மா சொல்வாங்க.. அதனால் நொறுக்குத்தீனிக்கு எங்க வீட்டில என்னமாச்சும்ன்னே ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
மகன் வழக்கமாக பள்ளியிலிருந்து வரும்போதே கடைக்கு போகலாம் போகலாம் என்று நச்சரிப்பான். போனால் குர்க்குரே , லேஸ் , அங்கிள் சிப்ஸ் அல்லது ஃபன் ஃப்லிப்ஸ் இப்படி எதயாவது வாங்குவேன் என்று அடம்பிடிப்பான். குர்க்குரே சாப்பிடாதீர்கள் அதில் ப்ளாஸ்டிக் இருக்கிறது. லேஸ் சாப்பிடாதீர்கள் அதில் கேன்சர் வரவழைக்கும் பொருள் இருக்கிறது என்று நம் நலம்விரும்பிகள் அனுப்பிய மெயில்கள் ஏற்படுத்திய திகில் வேறு. ஃபன் ஃப்லிப்ஸ் போன்றவை உண்மையில் அரிசி வச்சி அப்படி பொரி மாதிரி தக்கையாக எப்படித்தான் செய்வார்களோ? ஒரு பயத்தோடுதான் வாங்கித்தருவேன்.
சிறிது நாட்களாக கடையில் ஹிப்போ என்ற ஒரு பெரிய கருப்பு ஹிப்போ நம்மைப் பார்த்தபடியே நிற்பதைப் பார்த்துவிட்டு கண்டும் காணாமல் வந்துகொண்டிருந்தேன். அதன் மேலட்டையில் இருந்த நீள்வட்ட வடிவ அந்த மன்ச்சீஸ் (backed munchies) என்றால் என்ன என்று தெரியவில்லையே என்று ஒரு ஆர்வத்தில் இத்தாலியன் பிசா வகையில் ஒன்றை வாங்கிவந்தேன்.

ஹிப்போ பார்லேயின் புது தயாரிப்பாம். மற்றவங்க மாதிரி இல்லை நாங்க.. ஆமாம் சும்மா என்ன உருளைகிழங்கும் , வறுத்ததும் , பொறிச்சதும் சாப்பிட்டுக்கிட்டு... ஹிப்போ கேர்ஸ் (cares) அதுவும் இந்த சூப்பர் ஹீரோஸ் மற்றும் உலகத்தலைவர்கள் எல்லாம் எதெதெற்கோ போராடுகிறார்கள் . பசிக்கு எதிரா போராடலயாம். அதனால் தான் ஹிப்போ இந்த ப்ரச்சனையை தன் கையில் எடுத்துக்கிட்டு அடுக்களைக்குள் புகுந்து விட்டதாம் பசியா இருக்கும் போது நீங்க வறுத்தது பொறிச்சத சாப்பிட்டு என்னடா இதைப்போய் சாப்பிடுகிறோமே என்றெல்லாம் குற்ற உணர்ச்சியில் வாடவேண்டாமாம். இது ரொட்டித்துண்டுகளை (wheat bread crumbs) (bake) செய்து தயாரிக்கப்படுகிறது.
”ஹிப்போவை கையோடு வைத்துக்கொண்டால் நீங்கள் பசியோடு வேலை செய்யவேண்டியதில்லை. பசியோடு இருக்கிறவன் மகிழ்ச்சியா இருப்பதில்லை. பசியோடு இருப்பவன் அதிகம் சண்டைபோடுவான். அதனால் ஹிப்போ ட்ரை’ந்னு எக்கச்சக்கமா ஹிப்போ மேலட்டையில் அறிவுரை சொல்லி இருக்கிறது.
இதை எழுதிக்கொண்டே நேற்று வாங்கிவந்த ஹிப்போ தாய் சில்லி (thai chilli) காலி செய்துவிட்டேன். நிஜமாய் சொல்கிறேன். இப்போ நான் ஹிப்போக்கு அடிமை. ஹிப்போ என்னை ஹிப்னாடிஸ் செய்துவிட்டது. கடைக்கு மகனுக்கு என்னமாச்சும் வாங்கச் சென்றால் ”அம்மாக்கு இது ஒன்று” என்று நானே எடுத்துக்கொள்கிறேன். இதிலும் அது இருக்கு இது இருக்கு என்று யாராவது மெயில் போட்டு பயப்படுத்தாத வரை ஹிப் ஹிப் ஹிப்போ!!