அவர் அன்று வழக்கத்துக்கு மாறாகவே பணப் பரிவர்த்தனையை முடித்திருந்தார்.கிளையில் எல்லோருக்கும் ஆச்சர்யம். நான்கு மணிவரைதான் பணப் பரிவர்த்தனை என்றாலும் நாலரை மணிவரை வாடிக்கையாளர்களுக்காக சேவை செய்கிற அவர் அன்று சற்று முன்னதாகவே முடித்துவிட்டார்.காரணம் அவரது உறவுப்பெண் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டதால் துக்க வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று சொன்னார். கிளைமொத்தமும் அந்த மரணத்தை அறியவும் அதுகுறித்து விவாதிக்கவும் தொடங்கியது.கணவன் குடிகாரனாம். எவ்வளவோ சொல்லியும் அவன் தனது குடிப்பழக்கத்தை விடவில்லையாம். வெறுத்துப்போன மனைவி.தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பற்றவைத்துக் கொண்டாளாம்.
அதைக்கேட்ட இளம் பெண் ஊழியர் ஒருவர் இப்படிச்சொன்னார்.ஓவராக்குடிச்சுட்டு வந்ததுக்கு அவம்மேல இல்ல மண்ணெண்னெய் ஊத்தி தீ வச்சிருக்கணும்.நான் சொல்லவந்தது அதுவல்ல. மறுநாள் காலை செய்தித்தாளில் ஒரு செய்தியைப்பார்த்தேன். சமைத்தபோது கவனக்குறைவாக இருந்ததால் தீப்பிடித்து இளம் பெண் சாவு என்றிருந்தது. என்னடா இது தொடர்ந்து பெண்களே தீயினால் இறந்து போகிறார்களே என்று வருத்தத்தோடு விளாவாரியாகப் படித்தேன். ஊர் பெயர் சம்பவம் தேதி எல்லாம் முதல்நாள் கேள்விப்பட்ட மரணச்செய்தி பற்றியதாக இருந்தது.காரணம் மட்டும் கயிறு திரிக்கப்பட்டு இருந்தது.அதற்குப் பெயர்தான் நடு நிலை நாளேடு.
இப்படித்தான் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் குறித்த செய்தியும். ஆளுங்கட்சி கரைவேட்டி கட்டியிருந்த அவரோடு பேச நேர்ந்தது.நகை அடகு வைக்க வந்த அவர்.அங்கிருந்து போவதற்குள் ஆறுமுறை தனது மகன் கடலியல் தொழில் நுட்பத்துக்கான பட்டப்படிப்பு படிப்பதாகச்சொன்னார்.சொல்லுகிற ஒவ்வொருமுறையும் அவரது கறுத்த முகம் பூரித்து பிரகாசிப்பதை பார்க்கமுடிந்தது. வெறும் பூரிப்பு மட்டுமல்ல பரம்பரை பரம்பரையாக கடல் தொழில்செய்கிற அவரது தொழிலின் மிக மேன்மையான இடத்துக்கு மகனை அனுப்பிவைக்கிற சந்தோஷம் அதில் பளிச்சிட்டது.
அடிக்கடி சிங்களக் கடற்படை நமது மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுகிறதே.நிரந்தரமாக நாம் ஏதும் செய்ய்ய முடியாதா ?.நமக்கும் கடலோரக் காவல்படை இருக்கிறதல்லவா என்ன தான் செய்கிறார்கள் என்று கேட்டேன்.சுற்று முற்றும் பார்த்துவிட்டு. சார் அவுங்க கடல் எல்லைக்குள் பத்து பதினைந்து கிலோமீட்டர் போய் நாம மீன்பிடிச்சா சும்மாவா விடுவான்.அதுவும் ஒரு நாடுதானே என்று சொன்னார்.அப்போ செய்தித்தாளில் வருகிறதெல்லாம். சார் பச்சையாய்ச்சொல்லப்போனால் அவுங்க வீடு புகுந்து நாம களாவாங்குறோம்.இதையெப்படி பேப்பர்ல போடுவான். இல்லீங்க கடல்ல எப்படி எல்லையைக் கணக்குப் பார்க்கமுடியும் அங்கென்ன சுவரா கட்டமுடியும் கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கத்தானே செய்யும் என்றேன். .கடகடவெனச் சிரித்துக் கொண்டு ஆயிரமாயிரம் வருஷமா கடலுக்குள்ள அலையிறோம் கடலப்பத்தி இஞ்ச் இஞ்சா எங்களுக்குத்தெரியும் சார் என்று சொன்னார்.
இப்படித்தான் ரஜினிகாந்தின் மருத்துவமும், சமச்சீர் கல்வி குறித்த செய்திக் குப்பைகளையும் நாம் வாங்கி அட்சர சுத்தமாகப் படிக்கிறோம். இன்றைய செய்தி நாளைய வரலாறாம்.