Showing posts with label சிரிப்புக்கதை. Show all posts
Showing posts with label சிரிப்புக்கதை. Show all posts

6.5.10

செல்போன் கொலையாளியும்,தெருப்பசுமாடும்.

அந்த மத்தியதரக்குடியிருப்பில் மின்சாரம் தடைபட்டுப்போனது. அவர் சுற்றுசுவர் வாசலுக்கருகில் வந்து புகைபிடித்துக்கொண்டிருந்தார். எதிர்வீட்டு வாசலில் எங்கிருந்தோ வந்த பசுமாடு படுத்திருந்தது.இருளில் புகையின் நெடியெங்கும் பரவிக்கொண்டிருக்க.தூரத்தில் ஒருவர் தனக்குத்தானே புலம்பிக்கொண்டு வந்தார்.ஆமாம் முன்னாளெல்லாம் யாராவது  இடது காதைப்பொத்திக்கொண்டு வலது கையை ஆட்டிக்கொண்டிருந்தால் எதோ பாட்டு ஆலாபனை செய்கிற மாதிரித்தோன்றும். ஒருவன் யாருமற்ற வீதியில் கத்திக்கத்திப்பேசிக்கொண்டு வந்தால் அவனுக்கு எதோ விபரீதம் நடந்துவிட்டது என்று யூக்கிக்கலாம். இல்லை மனப்பிறழ்வாகிவிட்டதென்று யூகிக்கலாம்.இதுமாதிரியானவற்றையும் இன்னும் சொல்லக்கூடாததையெல்லாம் சகஜமாக்கிவிட்டது இந்த அலைபேசியின் வருகை. 

வந்தவன் உரக்கப் பேசிய அலைபேசிக் குரல் தெருவெங்கும் பரவியது. அவ்வளவு அதட்டலான குரல்.' ராஸ்கல் என்ன நெனச்சிக்கிட்ருக்கான்,
நம்மள என்ன பொட்டப்பயகன்னு நெனச்சானா'என்று சொல்லக்கூடிய வார்த்தைகளையும், சொல்லக்கூடாத வார்த்தைகளையும் உபயோகித்தான்.'மாப்ள  யார்ட்ட வந்து வாலாட்றான், ஸ்கெச்சப்போட்டு உடனே அவனத்தூக்கு, இனியும் பொறுக்க முடியாது'.என்று சொன்னபோது கேட்டுக்கொண்டிருந்த இவருக்கு இனந்தெரியாத கலக்கம் வந்தது. ஆஹா அநியாயமாக ஒரு மனித உயிர் பலிபோகப்போகிறதே என்று ஆதங்கப்பட்டார். அந்த அப்பாவி யாரோ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது இவர் நின்று கொண்டிருந்த இடத்துக்கருகே வந்துவிட்டான்.எதிர் வீட்டு சுற்றுச்சுவரருகே படுத்துக்கிடந்த மாடு செல்போன் கொலையாளியின் சத்ததைக்கேட்டு மிரண்டு,தடபுடாவென எந்திரிக்கவும்,அந்தானிக்ல, அலறிப்பிடித்து வந்தவழியே ஓடினான். நிக்கல,திரும்பிப்பாக்கல கண்ணிமைக்கும் நேரத்தில் தெருவைக்கடந்து காணாமலே போய் விட்டான். அந்த இடத்தில் அவனது ஒற்றைசெருப்பு மட்டும் தனித்துக்கிடந்தது.

நடந்தவற்றை அனுமானிக்கமுடியாமல் பசுமாடும் அங்கிருந்து கிளம்பியது.அருகருகே இருந்த குடித்தனக்காரர்கள் சினிமா நகைச்சுவையிலோ,அசத்தப்போவது யாரு நிகழ்சியிலோ கிடைக்கமுடியாத இந்த அரிய காட்சியைச் சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.
 
இதுவும் மின்சாரம் தடைபட்டுப்போன ஒரு முன்னிரவின் கதை.எங்கள் அன்புமுதலாளி தோழர்.செல்வக்குமார் திலகராஜ் சொன்னது.